குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: எடப்பாடியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைப்பு


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு:  எடப்பாடியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு
x

எடப்பாடியில் தனியார் ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்த சம்பவத்தை அடுத்து, அந்த ஆஸ்பத்திரி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சேலம்

எடப்பாடி,

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த சவுரியூரை சேர்ந்தவர் பூபதி (வயது 31). இவருடைய மனைவி சங்கீதா (28). சங்கீதாவிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சங்கீதா வீட்டிலேயே மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் 2 வாரங்கள் கழித்து அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திரும்பவும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து வயிற்றில் ரத்தக்கட்டி உள்ளது என 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், குடல் ஒட்டி உள்ளது எனக்கூறி 3-வது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

சாவு

இதனிடையே நேற்று முன்தினம் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து தவறாக அறுவை சிகிச்சை செய்ததால் தான் சங்கீதா இறந்துள்ளார் என கூறி மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். பின்பு சங்கீதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சங்கீதாவிற்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததால் தான் இறந்துள்ளார். எனவே டாக்டரை கைது செய்து, ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க வேண்டும் எனக்கூறி எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'சீல்' வைப்பு

இதுகுறித்து தகவலறிந்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இளமுருகன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சந்திரலேகா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் டாக்டரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்காமல் கலைந்து செல்ல மாட்டோம் என கூறினர்.

இதனால் அந்த பகுதியில் வந்த வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். பின்பு நள்ளிரவு 1.30 மணி அளவில் எடப்பாடி தாசில்தார் லெனின், துணை தாசில்தார் மகேந்திரன், வருவாயத்்துறை அதிகாரிகள் மற்றும் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டது.

வேறு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் மாற்றம்

முன்னதாக சங்கீதாவின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சமாதானம் அடைந்த சங்கீதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஆஸ்பத்திரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் நெடுமாறன் மற்றும் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதற்கு முன்பு இதே டாக்டர் செய்த தவறினால் ஆஸ்பத்திரிக்கு ஒருமுறை 'சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தினால் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story