ஆலங்குளத்தில் தனியார் நிதி நிறுவனத்துக்கு 'சீல்' வைப்பு
ஆலங்குளத்தில் தனியார் நிதி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆலங்குளம்:
சேலத்தை தலைமையிடமாக கொண்ட 'அமுத் சுரபி' என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கடந்த 5 ஆண்டுகளாக தினசரி சிறுசேமிப்பு வசூல், டெபாசிட் என ரூ.5 கோடி வரை வசூலித்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முதிர்வுத்தொகையை பொதுமக்களுக்கு திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் அதை திருப்பிக் கேட்டபோது, ஊழியர்கள் உரிய பதில் அளிக்காமல் நிறுவனத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா தலைமையிலான போலீசார் ஆலங்குளத்தில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அலுவலகத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஏராளமாேனார் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை 9498166615 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.