விழுப்புரத்தில்வாடகை பாக்கி செலுத்தாத கடை, குடியிருப்புக்கு சீல் வைப்புஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் வாடகை பாக்கி செலுத்தாத கடை, குடியிருப்பை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
வாடகை பாக்கி
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு அவை அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அதுபோல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகைகளை வசூலிக்கும் பணியிலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 22 கடைகளும், 6 குடியிருப்புகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை தொகையை செலுத்தாமல் ரூ.1 கோடி வரை பாக்கி வைத்திருந்தனர். எனவே வாடகை தொகையை உடனடியாக செலுத்தும்படி பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். அதன் பிறகு சிலர், தானாக முன்வந்து வாடகை தொகையை படிப்படியாக செலுத்தி வருகின்றனர்.
கடை, குடியிருப்புக்கு சீல்வைப்பு
இதனிடையே இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தவர் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 136-ஐ செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால் நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையில், விழுப்புரம் சரக ஆய்வாளர் லட்சுமி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், பரம்பரை அறங்காவலர் குமார், கணக்கர் சிவஜோதி ஆகியோர் வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 260 வாடகை பாக்கி வைத்திருந்த குடியிருப்பையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.