திருச்செந்தூரில் கடல்பாசிகள் கரை ஒதுங்கின
திருச்செந்தூரில் கடல்பாசிகள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் இருந்து கடல்பாசிகள் கரை ஒதுங்கின. இதனால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிப்பட்டனர்.
திருச்செந்தூர் கடல்
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரையோரம் அமைந்துள்ளது. இந்த ேகாவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கடல் சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதனால் பாறையில் படிந்திருந்த பாசிகள் வெளியே தெரிந்தன. பின்னர் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
பாசிகள் ஒதுங்கின
இந்த நிலையில் கடல்நீர் உள்வாங்கியதை தொடர்ந்து நேற்று காலையில் கடலில் இருந்து அதிக அளவில் கடல்பாசிகள் கரைஒதுங்கின.
இதையடுத்து கடல் பாதுகாப்பு குழுவினர், சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கடலில் இருந்து கரையை நோக்கி வரும் கடல் பாசிகளை எடுத்து கடற்கரையில் குவித்து வைத்தனர்.
அதிகளவில் கடல் பாசிகள் கரையை நோக்கி வெளியே வந்ததால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிப்பட்டனர். மாலையில் கடலில் இருந்து கடல்பாசிகள் வெளியே வராமல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
---------------