செபாஸ்தியர் ஆலய திருவிழா
செபாஸ்தியர் ஆலய திருவிழா
குன்னூர்
குன்னூர் மவுண்டு ரோட்டில் பழமை வாய்ந்த செபாஸ்தியர் ஆலயம் உள்ளது. இது மலையாள மொழி பேசும் மக்களுக்கு சொந்தமானது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு ஆராதனைகள், திருப்பலிகள், அம்பு ஊர்வலம் ஆகியன நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக ஆடம்பர மற்றும் குடும்ப விழா நடந்தது. இதையொட்டி ஆலய பங்கு தந்தை பிரயேஷ் புதுச்சேரி தலைமையில் மலையாள மொழியில் திருப்பலி நடைபெற்றது. குன்னூர் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜெயகுமார், உதவி பங்கு தந்தை ஆண்டோ தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண அலங்காரத்தில் செபாஸ்தியர் தேர் வீதி உலா வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் செண்டை மேளம் முழங்க ஆராதனை பாடல்களை பாடி வந்தனர். பின்னர் ஆலயத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மார்டின் புதுச்சேரி, அறங்காவலர்கள் ஆண்டனி, டோமி, செயலாளர் ஜோசப், பொறுப்பாளர்கள் ஜோஸ் குட்டி, சாஜூ ஆகியோர் செய்திருந்தனர்.