அனைத்துகட்சி பிரதிநிதிகளுடன் வேளாண்துறை செயலாளர் ஆய்வு


அனைத்துகட்சி பிரதிநிதிகளுடன் வேளாண்துறை செயலாளர் ஆய்வு
x

அனைத்துகட்சி பிரதிநிதிகளுடன் வேளாண்துறை செயலாளர் ஆய்வு

தஞ்சாவூர்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் வேளாண்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆபிரகாம் பேசியதாவது:-

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு வண்ணப்புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

கடந்த 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சைமாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. அதே போல் வருகிற 26, 27-ந்தேதிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story