வெயிலில் இருந்து வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க ஏற்பாடு
தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாக அருங்காட்சியக ராஜாளி பூங்காவில் வெளிநாட்டு பறவைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேற்கூரை மீது தென்னங்கீற்றுகள் வேயப்பட்டுள்ளன.
தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாக அருங்காட்சியக ராஜாளி பூங்காவில் வெளிநாட்டு பறவைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேற்கூரை மீது தென்னங்கீற்றுகள் வேயப்பட்டுள்ளன.
பழைய கலெக்டர் அலுவலகம்
தஞ்சை பழைய கோர்ட்டு சாலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் புதிய கலெக்டர் அலுவலகம் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது. பழைய கலெக்டர் அலுவலக கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த, பிரிட்டிஷ் கட்டிட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால் 1896 முதல் 1900 ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ-சராசனிக் கட்டிடக்கலையை சேர்ந்த இந்த கட்டிடத்தில், 120 ஆண்டுகளாக, கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இதையடுத்து பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ.8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சை தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
7 டி திரையரங்கம்
இதில், நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரசுவதி மஹால் நூலக காட்சியகம், '7டி' திரையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
ராஜாளி பறவைகள் பூங்கா
இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பறவைகள், விலங்குகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 20 நாடுகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான அரிய வகை பறவைகளை கொண்டுள்ள இந்த பூங்காவிற்கு ராஜாளி பறவை பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பறவைகள் பூங்காவில் உள்ள சிறப்பு என்னவென்றால் பறவைகளுக்கான உணவை கையில் வைத்து காத்திருந்தால் அதை உண்பதற்கு பறவைகள் வந்து நம் கைகளிலையே நின்று உணவை உண்ணும். பறவைகள், முயல், ஈமு கோழி அடைக்கப்பட்டுள்ள பகுதியில் சுற்றிலும் தகரத்தினால் கூண்டு அமைக்கப்பட்டு மேற்கூரையில் இரும்பினால் ஆன வலையும் போடப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இருப்பதால் இந்த பூங்காவிற்கு வந்து மகிழ்ச்சி அடைவதோடு, புகைப்படம் எடுப்பதும் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படும் இந்த பூங்காவை பொருத்தவரையில் பறவைகளை பார்ப்பதற்கு தனிகட்டணமும், அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மேற்கூரை மீது கீற்றுகள் அமைப்பு
தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் ராஜாளி பறவைகள் பூங்காவில் குளிர் தேச பகுதியில் இருக்கும் வண்ண வண்ண கிளிகள் உள்ளிட்ட பறவைகள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான தகரத்தினால் ஆன மேற்கூரை மீது தென்னங்கீற்றுகள் ஆங்காங்கே இடைவெளி விட்டு வேயப்பட்டுள்ளது.
தற்போது கேடை விடுமுறை என்பதால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. அவ்வாறு வருபவர்கள் பெரிய கோவில் அருகே உள்ள தஞ்சை அருங்காட்சியகம் ராஜாளி பறவைகள் பூங்காவிற்கு வந்து பூங்காவில் உள்ள ஈமுகோழி, முயல் புறாக்கள் வண்ணப்பறவைகளை கண்டு களித்து மகிழ்ச்சியுடன் சென்ற வண்ணம் உள்ளனர்.