உள்ளாட்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


உள்ளாட்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடந்தது. 30-ந் தேதி மாலை வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் தொம்மை சேவியர், உமரிக்கோட்டை பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினராக ரேணுகாதேவி, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக முகமது நவாஸ் அப்துல்காதர், பராக்கிரமபாண்டி பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக கண்ணன், பிச்சிவிளை 1-வது வார்டு உறுப்பினராக வனஜா, 4-வது வார்டு உறுப்பினராக மாரியம்மாள், 5-வது வார்டு உறுப்பினராக ஜெபராஜ், வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக பிரவின், பிடாநேரி பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக ஜெரால்டு சுகுணன், கோமாநேரி பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினராக மணி, சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினராக மகேசுவரி, சிதம்பரபட்டி பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராக சுப்பையா, ஜெகவீரபாண்டியாபுரம் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினராக அய்யோவு, ஜமீன்கோடாங்கி பட்டி பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராக ரத்தினவேல், கீழ்நாட்டுக்குறிச்சி பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக சண்முகலட்சுமி, மாதலாபுரம் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக கே.ஆர்.வேலுச்சாமி ஆகிய 16 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பிச்சிவிளை 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து அகரம், குறிப்பன்குளம், வெள்ளாளங்கோட்டை ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மொத்தம் 10 பேரும், மறவன்மடம் பஞ்சாயத்து 2-வது வார்டு, முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து 8-வது வார்டு, பிச்சிவிளை பஞ்சாயத்து 2-வது வார்டு, 3-வது வார்டு, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 9-வது வார்டு, வெள்ளாளன்விளை பஞ்சாயத்து 1-வது வார்டு சந்திரகிரி பஞ்சாயத்து 6-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 16 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வருகிற 12-ந் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், சாத்தான்குளம் அருள், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story