சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு-டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை
சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில் மூலம் டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூரமங்கலம்:
பலத்த சோதனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ரத்தீஷ் பாபு ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சிவ செந்தில்குமார், ஸ்மித் ஆகியோர் தலைமையில் போலீசார் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், நடைமேடை, தண்டவாள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றன.
பார்சல் அனுப்ப தடை
மேலும் வெளியூர்களுக்கு பார்சல் அனுப்புவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை (திங்கட்கிழமை) வரை தலைநகர் டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு வழக்கம்போல் பார்சல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமையில் துணை போலீஸ் கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் 900-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.