15 குழந்தைகளுக்கு பிரதமரின் பாதுகாப்பு சான்றிதழ்


15 குழந்தைகளுக்கு பிரதமரின் பாதுகாப்பு சான்றிதழ்
x

கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 குழந்தைகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ், அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 குழந்தைகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ், அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வழங்கினார்.

பிரதமர் தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் பாரத பிரதமர் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் கடிதம், பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு சான்றிதழ், அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம் மற்றும் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று நடந்தது.

புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இதை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த 10 குடும்பங்களை சேர்ந்த 15 குழந்தைகளுக்கு பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு சான்றிதழ், அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம், இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

பிரதமரின் திட்டம்

பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கலெக்டர் மற்றும் குழந்தை ஆகியோரின் இணைப்பு அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் இந்த உதவித்தொகை ரூ.10 லட்சத்தை நேரடியாக வரவு வைக்கப்பட்டு குழந்தைக்கு 18 வயது நிரம்பியவுடன் மாதாந்திர உதவித்தொகையும், அவர்கள் 23 வயது நிரம்பியவுடன் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

உறவினர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.4 ஆயிரம் குழந்தை மற்றும் பாதுகாவலர் ஆகியோரின் இணைப்பு வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். உறவினர்கள் அல்லாமல் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ரூ.4 ஆயிரம் குழந்தைகள் பராமரிப்பு நிறுவன வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

15 குழந்தைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்றோரில் ஒருவரை ஏற்கனவே இழந்து, கொரோனாவில் மற்றொரு பெற்றோரையும் இழந்த 10 குடும்பங்களை சேர்ந்த 15 குழந்தைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 18 வயதை அடைந்த 4 குழந்தைகளும் 18 வயதிற்குள்ளாக 11 குழந்தைகளும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, குழந்தைகள் குழும தலைவர் கலைவாணி, இளைஞர் நீதி குழும உறுப்பினர் பரமேஷ்வரன், மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story