கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்; அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை


கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்; அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
x

கோவில் திருவிழாக்களின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உயர் அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2023-2024-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படவேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்தும், கோவில் திருவிழாக்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கோடை வெயிலிலிருந்து பக்தர்களை காக்கும்வகையில் வசதிகளை ஏற்படுத்தி வழங்குதல் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

கோவில்களின் கும்பாபிஷேகம், தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் தீர்த்தவாரி விழாக்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடித்தல், இப்பணிகள் தொடர்பாக போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளுதல், தீ விபத்துகள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆலோசனை

அன்னதானம், பிரசாதம் மற்றும் கோவில்களின் பிரசாத விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்தல், கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள், கால்நடைகளுக்கு கோடைகாலத்துக்கு ஏற்ற உணவு, மருத்துவவசதி வழங்கப்படுவதை உறுதி செய்தல், அவை தங்குவதற்கான கொட்டகைகளில் தூய்மையையும், தேவையான வசதிகளையும் பராமரித்தல் போன்றவை குறித்தும் அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் ரெகுநாதன், இணை ஆணையர்கள் சுதர்சன், ஜெயராமன், செந்தில்வேலவன், தனபால், ரேணுகாதேவி, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story