கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் செடல் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடா்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு செடல் போடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் உடலில் செடல் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரத உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலிலும் நேற்று செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.