குளங்களில் வண்டல், கரம்பை மண் எடுக்க அனுமதி


குளங்களில் வண்டல், கரம்பை மண் எடுக்க அனுமதி
x

நெல்லை மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு குளங்களில் வண்டல், கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்காகவும், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கும், வண்டல், கரம்பை மண் எடுப்பதற்கு தங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மண் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் வெட்டி எடுப்பதற்காக 593 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசியலில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவும், புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் கன அளவும், மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தங்களது விவசாயம் தொடர்பான பட்டா, சிட்டா, அடங்கல், கிரைய பத்திரம் புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து தாலுகா அலுவலகங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விவசாயிகள் நில ஆவணங்களை வேளாண் அடுக்கு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களிலும் உள்ள குறு வட்ட அளவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தங்கள் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து சென்று கலந்து கொண்டு பதிவேற்றம் செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story