விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஆய்வு
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஆய்வு
காங்கயம்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிறு வகை விதைப் பண்ணைகளில், திருப்பூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் பி.அ.மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காங்கயம் அருகே காடையூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் உளுந்து பயிரில் வி.பி.என்-2 ரக ஆதார நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்து விதைச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது:
வம்பன் தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மையத்தில் உளுந்து பயிரில் வி.பி.என்-2 ரகம் 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டது 70 முதல் 75 நாட்கள் வயதுடைய இந்த ரகம் ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்றது. 30 முதல் 40 சென்டிமீட்டர் உயரம் வளரும். அதிக விளைச்சல் திறன் கொண்டது. சராசரியாக ஏக்கருக்கு 380 கிலோ மகசூல் தரவல்லது.இது வி.பி.என்-8 ரகத்தை காட்டிலும் 12 சதவீதம் கூடுதல் விளைச்சல் தரக்கூடியது.
மேலும் மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைச்சுருள் நோய் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு திறன் கொண்டது. ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஆதார நிலை விதை பண்ணைகள், விதைச்சான்று தரநிலைகளில் தேர்ச்சி பெற பிற கலவன்கள் அகற்றப்பட்டு 0.1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்குமாறு பராமரித்தல் வேண்டும். வயல் மட்ட தர நிலைகளில் தேர்ச்சி பெறும் விதைப் பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதை குவியல்கள் விதை சுத்தி நிலையங்களில் சுத்திகரிக்கப்படும்.
பின்னர் விதைச்சான்று அலுவலர்களால் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படும். விதை தர நிலைகளில் தேர்ச்சி பெற விதை குவியல்களின் முளைப்புத்திறன் 75 சதவீதம் மற்றும் புறத்தூய்மை 98 சதவீதத்துக்கு குறையாமலும், ஈரப்பதம் 9 சதவீதம் மற்றும் பிற ரக கலவன்கள் 10 எண்ணிக்கைக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறும் விதை குவியல்கள் சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது காங்கயம் விதைச்சான்று அலுவலர் காயத்ரி, உதவி விதை அலுவலர் கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.