நெல் சாகுபடியில் அதிக விளைச்சலை பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்-விதை பரிசோதனை அலுவலர் தகவல்
தர்மபுரி:
நெல் சாகுபடியில் அதிக விளைச்சலை பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தரமான விதைகள்
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி பணியை மேற்கொள்ள வேண்டும்.
விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
விதை பரிசோதனை
இதேபோல் விதைகளை வாங்கும் முன்னர் அந்த விதை குவியல்களுக்குரிய முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையை கேட்டு சரி பார்க்க வேண்டும். விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கப்படும் விதைகளுக்கு கட்டாயம் உரிய விற்பனை ரசீதை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நெல் சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தினால் தான் அதிக விளைச்சலை பெற முடியும்.
விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ள தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் ஒரு விதை மாதிரிக்கு உரிய கட்டணத்தை செலுத்தி விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். தரமான விதைகளை பயன்படுத்தி தரமான பயிர் சாகுபடியை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.