தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்- விதை ஆய்வு துணை இயக்குனர்
தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் பணிகளில் தற்போது விவசாயிகள் ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள். உளுந்து விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சான்று பெற்ற, சான்று அட்டை பொருத்தப்பட்ட தரமான உளுந்து விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகள் விற்பனையின் போது விதைச்சட்ட விதிகள்படி, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.
உளுந்து விதைகள்
விதை விற்பனையாளர்கள் தரமான உளுந்து விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முளைப்பு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாக தங்களது விற்பனை நிலையங்களில் வைத்திருக்க வேண்டும். தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்றிதழ் இல்லாத உளுந்து விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.