நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல்


நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி  பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல்
x

கோபி அருகே நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மாதிரி பள்ளி

கோபி அருகே அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 280 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த பள்ளிக்கூடத்தில் இதுவரை நிரந்தரமாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கெட்டிச்செவியூரில் உள்ள கோபி - குன்னத்தூர் செல்லும் ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூட மேலாண்மை குழு தலைவர் சரவண ராஜு தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'அரசு மாதிரி பள்ளிக்கூடத்துக்கு உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கோபி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story