நாமக்கல் மாவட்டத்தில் வாகன சோதனை: 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை


நாமக்கல் மாவட்டத்தில் வாகன சோதனை: 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையில் 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்

நாமக்கல்:

வாகன சோதனை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் ஆகியோர் உத்தரவின்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல், நித்யா, ரவிக்குமார், பிரபாகரன், கண்ணன், முத்துசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். மொத்தமாக 1,015 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 163 வாகனங்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

ரூ.1 லட்சம் அபராதம்

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 4 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story