மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 2¾ கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 2 கிேலா 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 2 கிேலா 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படைகள் அமைப்பு
குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பாக்குகள் விற்பனை, பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அத்தோடு அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.
ரோந்து பணி
இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் கட்டையன்விளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜீஸ்குமார் (வயது25), பெருவிளை மெயின்ரோட்டைச் சேர்ந்த செல்வன் (23) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
இதனால் அவர்கள் 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த போது 2 கிலோ 800 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெரீஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து ஜெரீஷ்சை தேடிய போது அவர் தலைமறைவானார்.
இதுதொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெரீஷை தேடி வருகிறார்கள். கைதான 2 பேர் மீதும் ஏற்கனவே இரணியல், நேசமணிநகர், ஆசாரிபள்ளம், வடசேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.