81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குமரி மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் களியக்காவிளை பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, களியக்காவிளை சந்திப்பில் வினுகுமார் என்பவரின் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3 மூடைகளில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், அப்துல் அஜீஸ் என்பவரது கடையில் இருந்து 7 கிலோவும், ஒற்றாமரம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரது கடையில் இருந்து 2 கிலோ என மொத்தம் 81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வினுகுமார், அப்துல் அஜீஸ், சலீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.