அனுமதியின்றி பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்


அனுமதியின்றி பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்கு அனுமதியின்றி பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்கு அனுமதியின்றி பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொக்லைன் எந்திரம்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், பொக்லைன் எந்திரம் பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. தடையை மீறி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தும் உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரித்து உள்ளார்.

விவசாய பணிகளுக்கு மினி பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பயன்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி அருகே கட்டுமான பணிக்காக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி உள்ளனர். அந்த வழியாக ரோந்து சென்ற கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், முறையாக அனுமதி பெற்று உள்ளனரா என ஆய்வு செய்தார்.

பறிமுதல்

அனுமதி பெற்று பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் காயத்ரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முதல் கட்டமாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர் சகுந்தலை, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு ஆகியோர் கோடநாடு பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்திய சூர்யா என்பவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பொக்லைன் எந்திரம் பயன்படுத்த அனுமதி பெற்றாலும், அரசு அலுவலக நேரத்தில் மட்டும் எந்திரத்தை பயன்படுத்த வேண்டும். நள்ளிரவில் அனுமதியின்றி எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story