70 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தர்மபுரி விற்பனை நிலையங்களில் 70 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா, மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் மீன் வளத்துறை உதவி ஆய்வாளர்கள் தர்மபுரியில் உள்ள மீன் மார்க்கெட், சந்தைப்பேட்டை மற்றும் பென்னாகரம் ரோட்டில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகளில் உள்ள ஐஸ் பெட்டிகளில் இருந்த மீன்களை சோதனை செய்ததில் தரம் குறைவான தகுதியற்ற கெட்டுப்போன மீன்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற கெட்டுப்போன மீன்களோ, தரம் குறைவான மீன்களோ விற்பனை செய்யக்கூடாது. மீன்களை நீண்ட நாள் இருப்பு வைக்கக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.