நோயாளிகளின் வாகனங்கள் பறிமுதல்
குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
குடியாத்தம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வாகனங்களையும் அகற்றுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ்சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நேற்று காலையில் குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், முரளி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் வாகனங்களும் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வாகனங்களை எங்கு நிறுத்துவது என கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபுவிடம் சென்று, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை அரசு மருத்துவமனைக்குள் உள்ள காலி இடத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.