சேலத்தில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்


சேலத்தில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்
x

சேலத்தில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் டம்ளர்களை திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

சேலத்தில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் டம்ளர்களை திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

தமிழக அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள், திண்டுக்கல்லில் விற்கப்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் அவ்வப்போது சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பார்சல் நிறுவனம் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், தங்கவேலு, பாலமுருகன் ஆகியோர் திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடைக்கு, லாரியில் கொண்டு வந்த பொருட்களை இறக்கி கொண்டிருந்தனர். அதன் அருகில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் சிதறி கிடந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.

ரூ.2½ லட்சம் டம்ளர்கள் பறிமுதல்

இதையடுத்து லாரியில் இருந்த பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது லாரியில் பெட்டி, பெட்டியாக பிளாஸ்டிக் டம்ளர்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 15 பெட்டிகளில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தன. இது குறித்து விசாரித்த போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை சேலத்தில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்தி செல்வதும், தேனி செல்லும் வழியில் திண்டுக்கல்லில் சில பொருட்களை இறக்குவதற்கு வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 15 பெட்டிகளில் இருந்த பிளாஸ்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த முடியாத வகையில் கத்தரித்து சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே அனைத்து தனியார் பார்சல் சேவை நிறுவனங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.



Next Story