ஆற்காட்டில் ரேஷன் பொருட்கள் பறிமுதல்
ஆற்காட்டில் ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மற்றும் நகர பகுதிகளில் தமிழ்நாடு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன், வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் மற்றும் குழுவினர் ஆற்காடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆற்காடு வேல் முருகேசன் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர். அப்போது 20 மூட்டைகள் ரேஷன் அரிசி மற்றும் 50 மூட்டைகள் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.