ரூ.5 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


ரூ.5 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:30 AM IST (Updated: 28 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பழனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பழனி பகுதி முழுவதும் பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பழனி குபேரபட்டினம் பகுதியை சேர்ந்த தி.மு.க. வார்டு செயலாளர் கோபிநாதன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அந்த கடையில் இருந்த 35 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதேபோல், பழனியில், வெள்ளையன் தெருவை சேர்ந்த காளிமுத்து (62), சேரன் ஜீவா நகரை சேர்ந்த மணிமாறன் (50) ஆகியோருக்கு சொந்தமான கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 410 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பழனி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூரில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (56) என்பவரது வீட்டில் நடந்த சோதனையில் 12 கிலோ புகையிலைப் பொருட்களை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. நிர்வாகி கோபிநாதன், காளிமுத்து, மணிமாறன், தங்கராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். போலீசாரின் அதிரடி சோதனையில், பழனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

நத்தம்

நத்தம் பஸ் நிலையம் மற்றும் அவுட்டர் பகுதியில் உள்ள கடைகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பூபதி உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நத்தத்தை சேர்ந்த ஜஹாங்கீர் (50), சம்சுதீன் (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 32 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story