ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்..
வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்..
அரியவகை உயிாினங்கள்
கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகை மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரகசிய தகவல்
வெளிநாடுகளில் உணவுக்காகவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பதற்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தமிழக கடலோர பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
விசாரணையில், நாகை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததும், போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலகத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.