கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
சாலையோர கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பத்தில் வ.உ.சி திடல், மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதியில் சாலையோர கடைகள் உள்ளன. இந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சரண்யா ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடைகளில் கெட்டுப்போன, செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் காளான், காளிபிளவர் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
இதேபோல் மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் கூறுகையில், கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர உணவு கடை விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவில் கலப்படம் செய்தாலோ, காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.