மஞ்சப்பை விருதிற்கான தேர்வுகுழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சப்பை விருதிற்கான தேர்வுகுழு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விருது மற்றும் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டதாக மஞ்சப் பை விருதிற்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்த 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் குறித்து தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். இதில் சிறந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள்தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.