தேசிய போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டிகள்
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு போட்டிகள்
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 2023- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளன.
இதன்படி கால்பந்து விளையாட்டில் வீராங்கனைகளுக்கு மட்டும் தேர்வு போட்டி சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், ஆக்கி வீரர்களுக்கு மட்டும் தேர்வு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும் நாளை நடக்கிறது. இதேபோல் கோகோ விளையாட்டில் வீராங்கனைகளுக்கு மட்டும் தேர்வு போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கிலும், வாலிபால் விளையாட்டில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தேர்வு போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் நடக்கிறது.
பங்கேற்கலாம்
இந்த போட்டிகள் நாளை காலை 7 மணிக்கு நடைபெறும். இதேபோல் கூடைப்பந்து விளையாட்டில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தேர்வு போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை மறுநாள் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 1.1.2004-க்குள் பிறந்து இருக்க வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட், பள்ளி மாற்று சான்றிதழ், 5 வருட காலத்துக்குள் பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் இரண்டினை உடன் எடுத்து வர வேண்டும்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தினப்படி மற்றும் பயணப்படி எதுவும் வழங்கப்படாது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகள் இந்த தேர்வு போட்டிகளில் பங்கேற்று தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொண்டு சாதனைகள் படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.