நில அளவையர் பணிக்கான தேர்வை 1,622 பேர் எழுதினார்கள்


நில அளவையர் பணிக்கான தேர்வை 1,622 பேர் எழுதினார்கள்
x

வேலூர் மாவட்டத்தில் நில அளவையர் பணிக்கான தேர்வை 1,622 பேர் எழுதினார்கள். 925 பேர் பங்கேற்கவில்லை.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நில அளவையர் பணிக்கான தேர்வை 1,622 பேர் எழுதினார்கள். 925 பேர் பங்கேற்கவில்லை.

நில அளவையர் பணிக்கான தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 நில அளவையர், 236 வரைவாளர், 55 உதவி வரைவாளர் என மொத்தம் 1,089 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. நில அளவையர் தேர்வு எழுத வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2,547 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்காக வேலூர் கொணவட்டம் அரசுப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சாந்திநிகேதன் பள்ளி, சினேகதீபம் பள்ளி, செவன்த்டே பள்ளி, தேசியா மெட்ரிக்பள்ளி ஆகிய 9 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை மற்றும் மாலை வேளைகளில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வு நடந்தது.

1,622 பேர் எழுதினார்கள்

இதையொட்டி காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில், விண்ணப்பித்த 2,547 பேரில் 1,622 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 925 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பிற்பகல் 2 மணிக்கு 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில், 1,615 பேர் எழுதினார்கள். 932 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story