சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
x

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

கடலூர்



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால், காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு ஜூன் 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் மேல் நிலைப்பள்ளி, கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

எழுத்து தேர்வு

இதையடுத்து நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத வரும் தேர்வர்கள், தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும் என்றும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காலை 8 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர்.

அப்போது அவர்கள் அனைவரையும் தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் போலீசார் நிறுத்தி அவர்களிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இருக்கிறதா? என்பதை சரிபார்த்த பிறகே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

மேலும் தேர்வு எழுத வந்தவர்கள் வைத்திருந்த கைப்பை, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெற்று, ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.

1,550 பேர் எழுதவில்லை

இதையடுத்து காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. பொது அறிவுத்தேர்வாக நடந்த இந்த தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. மாவட்டத்தில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 9,107 பேரில் 7,557 பேர் தேர்வு எழுதினர். 1,550 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதனை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மாலை 5.10 மணி வரை நடந்தது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த 9,278 பேரில் 7,656 பேர் வந்திருந்து ஆர்வமுடன் தேர்வு எழுதினர். 1,622 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஐ.ஜி. பார்வையிட்டார்

இதற்கிடையே கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை ஐ.ஜி. ராதிகா பார்வையிட்டார். அப்போது கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உடனிருந்தார். இத்தேர்வையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 109 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 836 போலீசார் தேர்வு பணியில் ஈடுபட்டனர். மேலும் 5 தேர்வு மையங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்வு எழுத மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தேர்வர்களின் வசதிக்காக கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து 5 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கிறது.


Next Story