கூடைப்பந்து, இறகுப்பந்து வீரர்கள் தேர்வு போட்டிகள்
மண்டல அளவிலான அணிக்கு கூடைப்பந்து, இறகுப்பந்து வீரர்கள் தேர்வு போட்டிகள் நாளை மறுநாள் தேனியில் நடக்கிறது.
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விரைவில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு போட்டிகளுக்கும் மாநில அளவிலான அணிகள் தேர்வு செய்யப்படும். தமிழ்நாட்டில் மாநில அளவிலான அணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு விளையாட்டுக்கும் மண்டல அளவிலான தேர்வு போட்டிகள் நடத்தி மண்டல அளவிலான அணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து, இறகுப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), வருகிற 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இறகுப்பந்து அணிக்கான வீரர்- வீராங்கனைகள் தேர்வு வருகிற 4, 5-ந்தேதிகளில் நடக்கிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடக்கின்றன. இதில் தேர்வு செய்யப்படும் மண்டல அளவிலான அணி வீரர்-வீராங்கனைகள், மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்பார்கள். அதில் இருந்து மாநில அளவிலான அணி வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தகவலை தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் தெரிவித்தார்.