பகுதி சபா உறுப்பினர் 144 பேர் தேர்வு
வாணியம்பாடி நகராட்சியில் பகுதி சபா உறுப்பினர் 144 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கிராமப்புறங்களில் நடைபெறும் கிராம சபா கூட்டங்களை போல நகரப் பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் மகாசபை கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டது. அதன்படி முதல் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மகாசபை கூட்டத்தையொட்டி, வாணியம்பாடி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கயாஸ் அஹமத், ஆணையாளர் மாரிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் வார்டு குழு மற்றும் பகுதி சபாக்களுக்கு வார்டு கமிட்டி செயலாளர்களும், பகுதி சபா செயலாளர் என 36 பேர் நியமனம் செய்யப்பட்டது. மேலும் பகுதி சபா குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் 4 பேர் என 144 பேர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், மா.பா.சாரதி, ரஜினி, நாசீர் கான், பஷீர், பிரகாஷ், ஆஷா பிரியா, ஹாஜியார் ஜகீர்அஹமத் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.