அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, பெரியாத்துக்குறிச்சி கிராமம் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் நிறைந்த கிராமமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு செல்ல வேண்டுமானாலோ சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டிமடத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்திற்கு சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பெரியாத்துக்குறிச்சி கிராமத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவமனை கட்டுவதற்கு போதுமான இடத்தை தேர்வு செய்து கொடுக்குமாறு ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெரியாத்துக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாவாடைராயன் அவரது சொந்த செலவில் 66 சென்ட் நிலத்தை விலை பேசி புதிய மருத்துவமனை கட்டுவதற்காக ஆண்டிமடத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து ஆண்டிமடம் மேம்படுத்தப்பட்ட சமுதாய சுகாதார மைய அலுவலரிடம் பத்திரத்தை ஒப்படைத்தனர். இதனால் பெரியாத்துக்குறிச்சி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போகும் மகிழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாவாடைராயனை பெரியாத்துக்குறிச்சி கிராம பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.