சதுரங்க வீரர்கள் தேர்வு
விழுப்புரத்தில் நாளையும் நாளை மறுநாளும் சதுரங்க வீரர்கள் தேர்வு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு சார்பில் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம்(ஜூலை) 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 189 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு மாணவர், மாணவி என 2 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான தேர்வு போட்டி விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் விழுப்புரம் அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்பதற்கு நுழைவுக்கட்டணம் இல்லை. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் உறுப்பினர் பதிவு செய்திருக்க வேண்டும். இப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 25 கோப்பைகள் என மொத்தம் 50 கோப்பைகள், சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவி மாமல்லபுரம் போட்டியை நேரில் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.