ஜவுளி பூங்கா அமைக்க ரூ.5 கோடியில் நிலம் தேர்வு-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
சாயல்குடி அருகே ஜவுளி பூங்கா அமைக்க ரூ.5 கோடியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே ஜவுளி பூங்கா அமைக்க ரூ.5 கோடியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
புதிய மின்மாற்றி
சாயல்குடி அருகே அல்லிக்குளம் கிராமத்தில் புதிய மின் மாற்றி மற்றும் கபடி போட்டி தொடக்க விழா, பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நலவாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், தி.மு.க. சாயல்குடி ஒன்றிய செயலாளர் (கிழக்கு) குலாம் முகைதீன், (மேற்கு) ஜெயபாலன், கடலாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் (வடக்கு) ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் (கிழக்கு) பூபதி மணி, மத்தி கோவிந்தராஜ், சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி முனியசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
ரூ.5 கோடியில் நிலம் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ.2,882 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கஞ்சம்பட்டி கால்வாய், வெகுநாதர் காவிரி, சங்கரதேவன் கால்வாய், குண்டாறு, மலட்டாறு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மழை பெய்யாவிட்டாலும் ஒரு போக விவசாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாயல்குடி அருகே நரிப்பையூர், கன்னிராஜபுரம் பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.5 கோடியில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நபார்டு வங்கி உதவி மூலம் பணிகள் நடைபெற்று வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
யூனியன்கள் பிரிக்கப்படும்
முதுகுளத்தூர் தொகுதி 159 ஊராட்சிகளை கொண்ட பெரிய தொகுதியாக உள்ளதால் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மக்கள் சிரமப்படுகின்றனர். அதற்காக முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள முதுகுளத்தூர், கமுதி, கடலாடி யூனியன்கள் போக விரைவில் சாயல்குடி, சிக்கல் என 5 யூனியன்களாக பிரிக்கப்படும்.
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெண்கள் பிரசவத்திற்கு சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் வீரபாண்டியன், தென்னரசி செல்ல பாண்டியன், இதம்பாடல் மங்களசாமி, ஜெயலட்சுமி வடமலை, ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வகிதா சகுபர், இளங்கோவன், பார்த்தசாரதி, கோகுலம் மருத பாண்டியன், ஏர்வாடி பாலமுருகன், மிசா சினி முகம்மது, ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி, சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.