ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு
ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை உதவி கலெக்டர் ஆய்வுசெய்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடத்தை நேற்று உதவி கலெக்டர் மகாலட்சுமி ஆய்வு செய்தார்.
நீதிமன்றம் திறப்பு
ஓட்டப்பிடாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ரா.குருமூர்த்தி வாடகை கட்டிடத்தில் திறந்து வைத்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு முப்புலிவெட்டி, ஒட்டப்பிடாரம்-நெல்லை சாலை பட்டுப்பண்ணை அருகில் அரசு புறம்போக்கு ஆகிய இரு இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இடம் தேர்வு
அப்போது ஒட்டப்பிடாரம்-நெல்லை சாலையில் அரசு இடத்தை அவர்கள் தேர்வு செய்தனர். இந்த இடத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் புறம்போக்கு இடம் இருப்பதால் இந்த இடத்திலே நீதிமன்றத்துக்கு சொந்த கட்டிடம் கட்டிடம் கட்டப்படுவதுடன், அதே வளாகத்தில் தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
உதவி கலெக்டர் ஆய்வு
இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நில அளவை அலுவலர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
,