உணவு சமைத்து வழங்க மகளிர் குழுவில் இருந்து பொறுப்பாளர்கள் தேர்வு; கலெக்டர் தகவல்
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு சமைத்து வழங்க பொறுப்பாளர்கள் மகளிர் சுய உதவி குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு சமைத்து வழங்க பொறுப்பாளர்கள் மகளிர் சுய உதவி குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறிப்பதாவது:-
காலை உணவு திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,544 பள்ளிகள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் உணவு சமைத்து வழங்க ஊராட்சி அளவில் முதன்மை குழு அமைத்து, இந்த குழு மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உணவு சமைக்கும் மையத்தின் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள உணவு தயாரிக்கும் மையத்திற்கு காலை 6 மணிக்குள் வரவேண்டும். 8.30 மணிக்குள் உணவு சமைத்து குழந்தைகளுக்கு பரிமாறி முடிக்க வேண்டும். மைய பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.
தற்காலிக பணி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மைய பொறுப்பாளர்களின் குழந்தைகள் அந்த பள்ளியில் 5-ம் வகுப்பிற்குள் படிக்க வேண்டும். இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். இந்த பணி தற்காலிக மற்றும் விருப்ப பணியாகும். மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். இதர படிகள் வழங்கப்படாது.
இந்த பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதன்மை குழு உறுப்பினர்கள் மீதோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் மீதோ புகார்கள் ஏதும் வரபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.