அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்
அரசு மருத்துவமனை
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ சேவைகளை வழங்கிடும் வகையில், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்பட உள்ளன. இதையொட்டி அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ கட்டிட வரைபட ஒப்புதல், திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து புன்செய் இடையாறு மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அதேபோல் வகுரம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி முதல் லத்துவாடி வரை செல்லும் சாலை பலப்படுத்தும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளின் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி, தாசில்தார் கலைச்செல்வி, நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயக்குமார், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாரகுமான் ஆகியோர் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.