நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு
கல்வராயன்மலையில் நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் உள்ள 171 மலைவாழ் கிராமங்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளிட்ட அலுவலகங்களை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தீயணைப்புநிலையம் மற்றும் நுகர்வோர் வாணிப கழக சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கரியாலூர் அருகே பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகமும், வெள்ளிமலை பகுதியில் தீயணைப்பு நிலையமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் அமைக்க முடிவு செய்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.
இ்ந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் நேரில் பார்வையிட்டு இறுதி முடிவு செய்தார். அப்போது கல்வராயன்மலை தாசில்தார் சையது காதர், மண்டல துணை தாசில்தார் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.