ஆலங்குடியில் புதிய நூலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு
ஆலங்குடியில் புதிய நூலக கட்டிடம் கட்ட இடத்தை அமைச்சர் மெய்யநாதன் தேர்வு செய்தார்.
ஆலங்குடி சந்தைப்பேட்டையில் முழுநேர கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகக்கட்டிடம் போதுமான இடவசதி இல்லாததால், சிறிய இடத்தில், அனைத்து நூல்களும் வைக்கப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் மற்றும் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத் தகங்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், வாசகர்கள் அமர்ந்து படிக்க போதுமான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், அதிக அளவில் மாணவர்கள் மற்றும் வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் போதுமான இடவசதி இல்லாமல் வாசகர்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மெய்யநாதன், இந்த நூலகத்தை மேம்படுத்தி ஏ.சி. அறையுடன் கூ டிய டிஜிட்டல் நூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, இன்று நூலகம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மெய்யநாதன் தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆலங்குடி சந்தைப்பேட்டையில் நூலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை அனுப்பப்பட்டு, விரைவில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படவுள்ளது. மேலும், ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆலங்குடி சந்தை மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதேபோல், கீரமங்கலம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 10 தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது, பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், தாசில்தார் விஸ்வநாதன், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், நூலகர் வாசக வட்ட தலைவர் பாபுஜான், நகர துணை செயலாளர் செங்கோல் உள்பட பலர் உடனிருந்தனர்.