சுழற்பந்து-வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு
சுழற்பந்து-வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு
நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் ஜூலியஸ் விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 14 வயது முதல் 24 வயது வரையிலான இளம்வேக மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெற உதவும் வகையில் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களோடு இணைந்து சிறப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நாகை மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் (பந்து வீச்சாளர்கள்) தங்களது பெயர்களை வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள வலை பயிற்சி களத்தில் நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருப்பிட சான்றிதழ் (ரேஷன் கார்டு) நகலோடு பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வீரர்களுக்கான தேர்வு திருவாரூர் அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் வருகிற பிப்ரவரி 25-ந்தேதியும் (வேகப்பந்து வீச்சாளர்கள்) மற்றும் (சுழற்பந்து வீச்சாளர்கள்) 26-ந்தேதியும் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.