சுய உதவிக்குழுவில் கடன் பெற்ற பெண் தற்கொலை
ராஜபாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்ற பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்ற பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மகளிர் குழுவில் கடன்
ராஜபாளையம் மங்காபுரம் தெருவை சேர்ந்த சக்திகுமார் (வயது 26). கொத்தனார். இவருக்கும் அய்யம்மாள் (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சக்திகுமாருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அய்யம்மாள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று மாதம் ரூ.2,300 செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. குடும்பச்சூழல் காரணமாக கடந்த மாதம் குழுவிற்கு பணம் செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண் தற்கொலை
இதனால் அய்யம்மாள் மனவேதனையில் இருந்தார். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு பூட்டிய நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யம்மாளின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.