சுயஉதவிக்குழு தலைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்
குலசேகரம் அருகே தவணைத்தொகையை செலுத்தாததால் சுயஉதவிக்குழு தலைவியை வங்கி ஊழியர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரம்:
குலசேகரம் அருகே தவணைத்தொகையை செலுத்தாததால் சுயஉதவிக்குழு தலைவியை வங்கி ஊழியர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுயஉதவிக்குழு தலைவி
குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆற்றூரில் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அந்த குழுவின் தலைவியான ஆற்றூர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், கடனை வார தவணையாக (அதாவது வாரம் ரூ.29,500 வீதம்) வங்கியில் செலுத்தி வந்ததாக ெதரிகிறது.
கொரோனா காலங்களில் சரியான வேலைகள் இல்லாததால் உரிய தேதிகளில் அதற்கான தவணை தொகையை சுயஉதவிக்குழுவினர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு வட்டியுடன் சேர்த்து தவணை தொகையை செலுத்தி வந்துள்ளனர்.
வங்கியில் சிறை வைப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மகளிர் சுய உதவிக்குழு தலைவியிடம் வங்கி ஊழியர்கள் தவணை தொகையை செலுத்துமாறு அழைத்துள்ளனர்.
அதன்பேரில் மாலையில் வங்கிக்கு சென்ற சுய உதவிக்குழு தலைவி தன்னிடம் குறைவான தொகையே உள்ளது என்றும், கால அவகாசம் தருமாறும் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் அவகாசம் தரமுடியாது என்று கூறியதுடன் பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று அவரை வங்கியில் சிறை பிடித்தனர்.
இதையறிந்த அந்தபகுதி பொதுமக்கள் வங்கி முன் திரண்டு சுயஉதவிக்குழு தலைவியை விடுவிக்குமாறு ஊழியர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட் அங்கு வந்து வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறுநாள் பணம் செலுத்துவதாக கூறியதை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுயஉதவிக்குழு தலைவி விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.