உயிருக்கு உலை வைக்கும் 'செல்பி' மோகம்; ஆர்வத்தால் ஆபத்தை தேடும் இளைஞர்கள்
உயிருக்கு உலை வைக்கும் ‘செல்பி’ மோகத்தால் இளைஞர்கள் ஆபத்தை தேடுகின்றனர்.
ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'கேமரா'க்கள் அரிதாகப் பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாகப் பார்க்கப்பட்டனர்.
இன்று தொழில்நுட்பப் புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது.
செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
'செல்பி' மோகம்
அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற கேமரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.
திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது.
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
உயிருக்கு உலை
இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று 'செல்பி' எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.
இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரைத் துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.
இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.
உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி, புகைப்பட கலைஞர், பொதுமக்கள் கூறியதாவது:-
போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் (திண்டுக்கல்):- இருசக்கர வாகனம், கார்கள், ரெயில்களில் செல்லும் போது 'செல்பி' எடுப்பதை சிலர் சாகசமாக நினைக்கின்றனர். அதேபோல் அருவி, ஆறுகளின் ஓரத்தில் நின்றும் 'செல்பி' எடுக்கின்றனர். அதுபோன்ற நேரத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் பெரும் விபத்தில் முடிந்து விடும். இதனால் விலை மதிப்பில்லாத உயிரை இழக்க நேர்ந்துவிடும். எனவே ஆபத்தான முறையில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள், இளம்பெண்கள் தவிர்க்க வேண்டும்.
விழிப்புணர்வு தேவை
நாராயணன் (புகைப்பட கலைஞர், திண்டுக்கல்):- நான் பொழுதுபோக்காக புகைப்படம் எடுக்க தொடங்கினேன். புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட ஆர்வத்தால் 27 ஆண்டுகளாக ஸ்டூடியோ வைத்து தொழிலாக செய்கிறேன். ஒருகாலத்தில் வசதி படைத்தவர்கள் தான் புகைப்பட கலைஞரை அழைத்து அதிகபட்சம் 10 புகைப்படம் எடுப்பார்கள். கலர் புகைப்படம் பிரிண்ட் போடுவதற்கு சிங்கப்பூருக்கு அனுப்பினால் 15 நாட்கள் கழித்து கிடைக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் பிலிம் மாறி டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால் புகைப்பட தொழிலில் கடுமையான போட்டி ஏற்படுகிறது. கலை ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே தொழிலில் நிற்க முடிகிறது.
இதற்கிடையே செல்போன்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா இருக்கிறது. இதனால் கேமராவுக்காக செல்போன் வாங்குவது அதிகரித்துவிட்டது. எனவே செல்போன் வைத்துள்ள அனைவரும் புகைப்படம் எடுக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் லைக், ஷேர் ஆகியவற்றுக்காக 'செல்பி' எடுக்கும் பழக்கம் இளைய தலைமுறையிடம் அதிகரித்துள்ளது. விபத்தில் அடிப்பட்டு கிடப்பவர்கள், இறந்தவர்கள் அருகில் நின்றும் மனிதாபிமானம் இல்லாமல் 'செல்பி' எடுக்கின்றனர். அதேபோல் ஆபத்தை உணராமல் மலை உச்சி, அருவியில் நின்று 'செல்பி' எடுக்கின்றனர். புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. அதை நன்றாக பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆபத்தான முறையில் 'செல்பி' எடுத்து ஆபத்தில் சிக்கி கொள்ளக்கூடாது. இதுபற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆபத்தான சாகசங்கள்
அபிப்ரகுமான் (கல்லூரி மாணவர், பழனி):- முக்கியமான நபர்களை சந்திக்கும் போதும், முக்கிய இடங்களுக்கு செல்லும் போதும் 'செல்பி' எடுப்பேன். அதை பத்திரமாக வைத்து திரும்ப பார்க்கும் போது அழகான நினைவாக இருக்கிறது. 'செல்பி' எடுக்கும் போது சுய நம்பிக்கை அதிகரிப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதோடு நான் எல்லா நேரத்திலும் 'செல்பி' எடுப்பது இல்லை. இளைஞர்கள் ஆபத்தான முறையில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
வீணா (வானொலி அறிவிப்பாளர், கொடைக்கானல்):- 'செல்பி' மோகத்தால் இளம் தலைமுறையினர் பல்வேறு சாகசங்களை ஆபத்தான முறையில் மேற்கொள்கின்றனர். அழகு சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி அறிவு சார்ந்த விஷயங்களை பின்னுக்கு தள்ளி விடுகின்றனர். அடிக்கடி 'செல்பி' எடுப்பதால் முழங்கை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். முன்பெல்லாம் ஏதாவது விழாக்கள் நடந்தால் புகைப்பட கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுப்பார்கள். இப்போது செல்போனிலேயே கேமரா இருப்பதால் 'செல்பி', புகைப்படம் எடுக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. 'செல்பி' மோகத்தால் இளைஞர்கள் தங்களை தொலைத்து விடக்கூடாது. கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பகுதிகளில் கவனத்துடன் 'செல்பி' புகைப்படம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.