சம்பங்கி பூ பறிக்கும் கூலியை விட விலை குறைவாக விற்பனை


சம்பங்கி பூ பறிக்கும் கூலியை விட விலை குறைவாக விற்பனை
x

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சம்பங்கி பூ பறிக்கும் கூலியை விட விலை குறைவாக விற்பதால் தினசரி ஒரு டன் பூக்கள் குப்பைக்கு போகிறது.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

பூக்கள் உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்களம், சேந்தன்குடி, நகரம், செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, வம்பன், மழையூர், சம்மட்டிவிடுதி, செட்டியாபட்டி உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, காட்டுமல்லி உள்பட பல வகையான பூக்கள் உற்பத்தி பிரதானமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 15 டன் வரை பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு கீரமங்கலம் பூ கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

கமிஷன் கடைகள்

கீரமங்கலம் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பூக்கள் ஒவ்வொரு நாளும் தேங்காமல் விற்பனை ஆனது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் திருவிழாக்கள், திருமணம், காதணி விழாக்கள் என சுப நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்படாததால் பூ விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கீரமங்கலம் பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 2 டன் வரை விற்பனை ஆகாத பூக்கள் குப்பைக்கு போகிறது.

அதே போல தற்போது சம்பங்கி பூ மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 3 டன் வரை விற்பனைக்கு வருவதால் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் மாலைகள் கட்டப்படுவதில்லை. அதனால் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ சம்பங்கி பூ செடியில் இருந்து பறிக்க கூலியாக ரூ.20 கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கமிஷன் கடைகளில் ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.5-க்கு ரூ.10-க்கும் விற்பனை ஆகிறது.

குப்பைக்கு போகும் பூக்கள்

அப்படி விலை குறைவாக வாங்கியும் கூட பாதிக்கு மேல் குப்பைக்கு தான் போகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ சம்பங்கி பூ வுக்கு ரூ.15 வரை பறிக்கும் கூலியும், வியாபாரிகளுக்கு ரூ.5 வரையும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வீடுகளில் உள்ளவர்களே பூக்களை பறிக்க முடிந்த அளவு பறிக்கின்றனர்.

சம்பள ஆள் வைத்து பூ பறிக்கும் நிலையில் உள்ள ஏராளமான தோட்டங்களில் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே மலர்ந்து கருகி வருகிறது. நறுமணத் தொழிற்சாலை இருந்தால் வாசனை திரவியம் தயாரிக்க சம்பங்கி பூக்கள் அனுப்பலாம். இப்பகுதியில் எந்த தொழிற்சாலையும் இல்லாததால் டன் கணக்கில் பூக்கள் வீணாகி குப்பையில் தான் கொட்டுகிறார்கள்.

துர்நாற்றம் வீசும் பூக்கள்

கடந்த சில பல வருடங்களாக கமிஷன் கடைகளில் விற்பனை செய்ய முடியாமல் தேங்கும் பூக்கள் ஒவ்வொரு நாளும் பேரூராட்சி குப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். தற்போது வரை இதே போல தான் விற்பனை ஆகாத பூக்கள் மூட்டை, மூட்டையாக குப்பைக்கு போகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பூ கமிஷன் கடைகளில் விற்பனையாகாத சம்பங்கி பூக்களை மூட்டையாக கட்டி வைத்தும் கூட பேரூராட்சி குப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்லாததால் சில நாட்களாக மூட்டைகளில் தேங்கிய பூக்கள் அழுகி கடைவீதியில் துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி நிர்வாகம் பூக்களைக் கூட அள்ளிச் செல்லாமல் கடைவீதியில் அழுகி துர்நாற்றம் வீசுவது வேதனையளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


Next Story