ஈரோட்டில் கிலோ ரூ.130-க்கு விற்பனை:"தக்காளி விலை எப்போது குறையுமோ" இல்லத்தரசிகள் குமுறல்
ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுவதால், "தக்காளி விலை எப்போது குறையுமோ" என்று இல்லத்தரசிகள் குமுறுகின்றனர்.
ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுவதால், "தக்காளி விலை எப்போது குறையுமோ" என்று இல்லத்தரசிகள் குமுறுகின்றனர்.
தக்காளி விலை உச்சம்
நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை குறையாமல் கிலோ ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டிலும் தக்காளியின் விலை குறைந்தபாடில்லை. சமையலுக்கு முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது.
இதனால் தினமும் உணவு சமைக்க தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விலை குறையாமல் உச்சத்திலேயே நீண்டு கொண்டிருப்பதால் இல்லத்தரசிகள் வேதனையில் உள்ளனர்.
நடுத்தர ஏழை மக்கள் தக்காளியின் விலையை கேட்டு வாங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இருந்தாலும், சமையலுக்கு முக்கியமாக தேவைப்படுவதால் ¼ கிலோ, ½ கிலோ என்று குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர். எனவே தக்காளியின் விலை எப்போது குறையுமோ என்ற குமுறலில் இல்லத்தரசிகள் உள்ளனர்.
ரூ.10 உயர்வு
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வரத்து மிகவும் குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது. நேற்று மீண்டும் ரூ.10 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விலைபோனது. தக்காளி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஓட்டல், விடுதி நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இவற்றை மக்கள் தினமும் பயன்படுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே நடுத்தர மக்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காய்கறி விலை அதிகரித்திருப்பதால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
அரசு நடவடிக்கை
ஓட்டலில் ஏழை மக்கள் வாங்கி சாப்பிட முடியாத அளவுக்கு ஏற்கனவே உணவு வகைகளின் விலை அதிகாித்து விட்டது. இந்தநிலையில் காய்கறிகளின் விலை இதே நிலைமையில் தொடர்ந்தால் உணவு வகைகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற காய்கறியின் விலையை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை அரசே கொள்முதல் செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து மக்களிடம் விற்க வேண்டும். ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே பயனடைய முடிந்தது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி தக்காளி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.