கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்
பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பது குறித்து புகார் அளிக்கலாம் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஞ்சா விற்பனை
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், 4 சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வழிகாட்டுதலின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் உடமைகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் காவல்துறை சார்பில் பொது இடங்களில் கஞ்சா குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல், விழிப்புணர் ஊர்வலங்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
புகார் அளிக்கலாம்
இந்தநிலையில் பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ, அதற்கு அருகிலேயோ மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக இருக்கும்பட்சத்தில் அந்த தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகித்தனர் மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விவரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கக்கூடிய இந்த எண்ணில் தெரியப்படுத்தலாம்.
அதன்படி, மதுரை - 94981 81206, விருதுநகர் - 94439 67578, திண்டுக்கல்- 85258 52544, தேனி- 93440 14104, ராமநாதபுரம் - 83000 31100, சிவகங்கை- 86086 00100, நெல்லை- 99527 40740, தென்காசி- 93856 78039, தூத்துக்குடி - 95141 44100, கன்னியாகுமரி - 70103 63173 என்ற எண்களில் மாவட்டம் வாரியாக தொடர்பு கொள்ளலாம். தகவல் தரும் நபர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். புகார்கள் தெரியப்படுத்தும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.