போலி ஆவணங்கள் மூலம் சிமெண்ட் மூட்டைகள் விற்பனை: 39 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சிறைத்தண்டனை


போலி ஆவணங்கள் மூலம் சிமெண்ட் மூட்டைகள் விற்பனை: 39 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சிறைத்தண்டனை
x

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை போலி ஆவணங்கள் மூலம் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 39 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்கில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் அலுவலர்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட்டை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்க தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிறுவனம் மூலம் 1982-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை வடகொரியா, தென்கொரியா நாடுகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

3-3-1983 முதல் பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு சிமெண்ட் மூட்டைகள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன.

அப்போது, ஆலந்தூர், நங்கநல்லூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் போலியாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், திட்ட அனுமதி, கட்டிட அனுமதி போன்ற ஆவணங்கள் மூலம் இந்த சிமெண்ட் மூட்டைகளை வினியோகஸ்தர்கள் மூலம் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர்.

விடுதலை

இதுகுறித்து, அப்போதைய தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் மார்க்கெட்டிங் அலுவலர் நாராயண சங்கரன், அவரது நேர்முக உதவியாளர் ராஜகோபாலன், கணக்காளர் தாமோதரன், இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த தனிநபர்கள் சுந்தரராஜன், தனசிங், செல்வராஜ், லாரன்ஸ், வைரவநாதன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 1984-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை, லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு விசாரித்தது. விசாரணையின்போது, சுந்தரராஜன் இறந்துவிட்டார். பின்னர், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை என்று கூறி மீதமுள்ள 8 பேரை விடுதலை செய்து கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

சிறைத்தண்டனை

இந்தத்தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நாராயணசங்கரன் காலமானார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில், ''நேர்முக உதவியாளர் ராஜகோபாலன் (வயது 71), கணக்காளர் தாமோதரன் (76), இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன் (68) ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். தனிநபர்களான மற்றவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை செய்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதன்படி தண்டனை பெற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story